எனக்கு புரிஞ்சது

கடை

நகர வாழ்வில் இருந்து மீண்டு கிராம வாழ்விற்கு பழகிக்கொண்டிருக்கும் வேளையில், இந்த புரிதல் எனக்கு வந்தது.

சட்டென்று தோன்றிய எண்ணம் என்று கூட சொல்லலாம். நகர் வாழ்வில் வீட்டை விட்டு வெளியே காலெடுத்து வைத்தால், நாம் செய்யக்கூடியது 2 விசயங்கள் மட்டுமே. மூன்றாவதாக மூச்சு மட்டும் விட்டுக் கொள்ளலாம், அவை

ஒன்று வேலைக்கு செல்வது, வேலை இல்லாவிட்டால் ஷாப்பிங்க் செய்வது. எங்கும் எதற்கும் எல்லாவற்றிற்கும் ஒரு கடை வீட்டைச் சுற்றி இருக்கின்றன அந்த வாழ்வில். புதிதாக வீடு கட்ட வேண்டும் அல்லது மாற வேண்டும் என்றால் கூட பக்கத்துல கடை இருக்கா என்று கேட்டுதான் தொடங்குகிறோம். சமையல் செய்ய வேண்டுமென்றாலும் கடை, உணவு உண்ண வேண்டுமென்றாலும் கடை. வீட்டுக்குத் தேவையான (பெரும்பாலும் தேவையில்லாத) எல்லாத்துக்கும் ஒரு கடை.

ஏன் கடை மீது நமக்கு இப்படி ஒரு சார்பு? கடைகளே அருகில் இல்லாத கிராம வாழ்வில் வீட்டை விட்டு வெளியே வந்தால் எனக்கு வானம் தெரிகிறது, பல உயிர்கள் தங்கள் வாழ்வை எப்படி வாழ்கின்றன என தெரிகிறது. என்னைப் பற்றி, என் உடலைப் பற்றி எல்லாம் சிந்திக்க முடிகிறது. அந்த ஆளில்லாத சாலையில் இருக்கும் அமைதி ஆயிரம் பாடல்களுக்கு சமமான இதத்தை அளிக்கிறது.

சரி விசயத்துக்கு வருவோம். இப்படி ஒரு சாலையில், ஒரு அழகான காலையில் நடந்து கொண்டிருக்கும் போது மனதில் ஒரு கேள்வி, கடை என்றால் என்ன?

தமிழில் கடை என்றால் கடைசி என்று பொருள். அதற்கும் அண்ணாச்சி (சின்ன முதல் பெரிய்ய ஏசி கடை அண்ணாச்சி வரை) கடைக்கும் என்ன சம்மந்தம்? ஆ, பதில் கிடைத்து விட்டது.

உனக்கு எது வேண்டுமோ அது உன்னிடத்தில் இருக்க வேண்டும். உன் சமையலுக்கு தேவையான விறகு உன் வீட்டு மரங்களிடம் இருக்கும், தானியங்கள் உன் நிலத்தில் இருக்கும், காய் கனிகள் உன் தோட்டத்தில் இருக்கும். நீர் உன் வீட்டுக் கிணற்றில் இருக்கும். இவை எதிலும் இல்லையா, கடைசியாக நீ போக வேண்டியது கடை!

உன் தொழிலின் உற்பத்திப் பொருள், விவசாயமாக இருந்தால் உணவுப்பொருள், பிற தொழில்களுக்கு பிற பொருள்; முதலில் உனக்கு, பின் உன் குடும்பத்திற்கு, அடுத்து உன் சமூகத்திற்கு, உன் விருந்தாளிகளுக்கு, உன்னிடம் வந்து உதவி கேட்பவர்களுக்கு. இவை எல்லாம் போக மீதி இருக்கும் உன் உற்பத்திப் பொருள் சேர வேண்டியது, அதான், கடை.

தற்சார்பு வாழ்வில் கடையின் பங்கு இதுவாகத் தான் இருக்கும் என்று தோன்றுகிறது. சரிதானே?

ஏனோ நவீன பொருளாதாரம், வாங்கவோ விற்கவோ, முதலில் கடையில் தான் தொடங்குகிறது. யாருக்கும் எதையும் கொடுக்க பங்கிட்டுக் கொள்ள எண்ணம் இல்லை. லாபக் கணக்கையே முதலில் எண்ணுகிறோம். எனவே நம் தொழில், நம் உற்பத்தி அனைத்தையும் அதிகமாக சொந்தம் கொண்டாடுகிறோம், அவற்றை அடையாளப்படுத்த ஏகமாக மெனக்கெடுகிறோம். கடை – என்பதை கடைசியாக வைக்காமல், முதலில் வைத்து நம் வாழ்வை அமைத்துக் கொண்டதன் விளைவு, நம் மிதமிஞ்சிய நுகர்வால் சூழலியத்தையும் கெடுத்துக் கொண்டிருக்கிறோம். பேக்கிங்க்(Packing), பிராண்டிங்க் (Branding) என நானுமே கூட பல சிறு குறு நிறுவனங்களுக்கு வேலை செய்திருக்கிறேன். ஆனால் இப்போதாவது என் இருண்ட மண்டையில் சிறு வெளிச்சமாக சில சிந்தனைகள் எழுவதை இரசிக்கிறேன்.

1+
உங்கள் மின்னஞ்சலில் என் கிறுக்கல்கள் வேண்டுமா?

Ready for the Leap?

Now rev-up your creative engines and wait for my E-mail! I will get in touch with you as soon as humanly possible!

WhatsApp me if you have any questions