கதைத் தெரு

இரண்டாவது படுக்கை அறை

தலைப்புகள்

பூபாலன் காலையிலேயே பரபரப்பாகக் காணப்பட்டான். இன்று அவனது புதிய 2 படுக்கையறை கொண்ட அடுக்குமாடி வீட்டின் கிரகப் பிரவேசம். பெரிய அளவில் ஏற்பாடு செய்திருந்தான். அவனது மனைவி புவனா குழந்தையை ஆயத்தப் படுத்திக் கொண்டிருந்தாள். 
பூபாலன் தான் குடியிருந்த பூர்விக வீட்டினை வெளியில் நின்று பார்த்துக் கொண்டிருந்தான். வாடகை வீடுதான், என்றாலும் தன்னுடைய தந்தை வளர்ந்து பின் தானும் பிறந்து வளர்ந்த வீடு என்பதால் 32 வருட நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருந்தான். அவனது மனைவி வேகமாக வெளியே வந்து வீட்டைப் பூட்டிக் கொண்டிருந்தாள்.
“பூபாலன், என்ன பாத்துக்கிட்டிருக்கீங்க, காரை எடுங்க, ஏற்கனவே 10 நிமிசம் லேட்டு” பூபாலனை ஒரு விரட்டு விரட்டிவிட்டு காரில் ஏறினாள். 
புது வீடு ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் அமைந்திருந்தது. விசேஷத்திற்கு நிறைய நண்பர்கள் வந்திருந்தார்கள். புவனாவின் தோழிகளும் வந்திருந்தார்கள். 
பழைய வீட்டில் தான் விளையாடிய கயிற்று ஊஞ்சல், அரசமரம், பின்முற்றத்து துளசி மாடம், முன்னால் இருந்த மண் தரை எதுவும் இனி தன் வாழ்வில் இல்லை என்பதை நினைத்துக் கொண்டான். தன் குழந்தைக்கும் அது இனி நினைவிருக்காது என்றும் வருந்தினான். 
புதிய வீடு இரண்டு படுக்கை அறை கொண்டது. முற்றிலும் விலை உயர்ந்த கிரானைட் பதிக்கப்பட்ட தரை, பெரிய பெரிய கண்ணாடி ஜன்னல் என எல்லாமே உயர் ரகம் தான். 
“மாமியார் எங்கே புவனா?” வந்திருந்த தோழி புவனாவை விசாரித்துக் கொண்டிருந்தாள். 
 புது வீட்டுக்கு நாங்க வர்றதுஅவங்களுக்கு பொறுக்கலை. மாடி ஏறனும்,  பக்கத்துல கடை இல்லை, எனக்கு கால் வழுக்கிடும் அப்படி இப்படின்னு ஏகப்பட்ட நொட்டை நொள்ளை சொல்லிகிட்டிருந்தாங்க, பழைய வீட்டில் வாழ்ந்தவங்க, அந்த வீட்டை விட்டுப் பிரிய மனசு இல்லை. அதுக்காக அவங்க போய்ச் சேருற வரைக்கும் புது வீட்டைப் பூட்டியா வெச்சிருக்க முடியும்? அதான் அவங்க வயசை ஒத்த மக்களோட இருக்கட்டும்னு அவங்களை முதியோர் இல்லத்துக்கு அனுப்பச் சொல்லிட்டு இங்க வந்துட்டேன்.” 
“அடி சக்கை, இனிமே மாமியாீ தொந்தரவு இல்லை, எஞ்சாய்” என்றாள் இன்னொரு தோழி. 
பக்கத்தில் தன் தோழர்களோடு வீட்டை சுற்றிக் காட்டிக் கொண்டிருந்தான் பூபாலன். ***”வீட்டுக்கு பின்னாடி இரயில்வே காலனி இருக்கு. நல்ல மரங்கள் நிறைஞ்ச இடம். தினமும் வாக்கிங்க் போக ஏதுவா இருக்கும். அமைதியான இடமும் கூட. பழைய வீடு மெயின் ரோட் ஆயிடுச்சு. டிராபிக் வேற. இங்க அப்படி இல்ல. ரெண்டு பெட் ரூம் வேற” சிலாகித்தான் பூபாலன். 
“ரெண்டு ரூம் இருந்து என்னத்துக்கு உன் குழந்தை எப்படியிருந்தாலும் தனியாத்தான் வளரப் போகுது. அம்மாவையும் ஓரங்கட்டிட்ட…” என்று நண்பன் ஒருவன் கிண்டலடித்தான். 
இரண்டாவது அறை எப்படியிருந்தாலும் காலியாக இருக்கப் போவதுதானே. குத்தியது அவனுக்கு. ***மறுநாள் காலை, கொண்டாட்டக் களை இழந்திருந்த வீட்டின் வாசலில் நின்று கொண்டு ஷூ லேஸ் இறுக்கிக் கொண்டிருந்தான் பூபாலன். அருகே உள்ள இரயில்வே காலனிக்கு வாக்கிங்க் செல்வதாக கூறி விட்டுக் கிளம்பினான். 
அங்கே ஒரு வயதான கிழவி சாலை ஓரமாக தூங்கிக் கொண்டிருந்தாள். அவன் அந்த மரம் நிறைந்த சாலையின் மறுமுனைக்குச் சென்று திரும்பும் போது எழுந்து உட்கார்ந்திருந்தாள். கையை ஏந்தியபடி போவோர் வருவாரிடம் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தாள். பூபாலனும் ஒரு பத்து ரூபாயைக் கொடுத்து விட்டு நகர்ந்தான். 
“சே, எப்படித் தான் வீட்டை விட்டு இப்படி துரத்த மனசு வருதோ புவனா. நம்மள மாதிரி பொறுப்பா ஒரு முதியோர் இல்லத்துலயாவது கொண்டு சேர்த்திருக்கக் கூடாது?” மனைவியிடம் தான் கண்ட காட்சியை விவரித்துக் கொண்டிருந்தான். 
“வீட்டுல என்ன தொந்தரவு செஞ்சிருக்குமோ அந்தக் கிழவி. நீங்க அதை எல்லாம் ஏன் பாக்குறீங்க? இனிமே அதெல்லாம் பாத்துட்டு வந்து புலம்பாதிங்க. ” தலையை ஆட்டிக் கொண்டு குளிக்கப் போனான் பூபாலன். 
தினமும் அவன் அந்தப் பாட்டியை கடக்கும் போது பார்க்காமல் கடந்து போக பெரும் பிரயத்தனப் பட்டான்.  
அந்தப் பாட்டி நாய்களோடும் காக்கைகளோடும் அந்த மரத்தடியில் தான் தினமும் வாழ்கிறாள். 
இன்று தன் கையில் யாரோ போட்டுச் சென்ற ரொட்டிப் பாக்கெட்டை நாய்களோடு அந்தப் பாட்டி பகிர்ந்து கொண்டிருந்ததைப் பார்த்த பூபாலன், அதை புவனாவிடம் சொல்லிக் கொண்டிருந்தான். 
“இங்க பாருங்க, இந்த மாதிரி சீன் எல்லாம் சென்டிமெண்டா இருக்கும். ஆனா அந்தக் கிழவி என்ன பாடு படுத்தியிருந்தா வீட்டுல இருக்கவங்க இப்படி விரட்டி விட்டிருப்பாங்க. இதெல்லாம் பாத்தேன் பாவமா இருக்கு, பத்து ரூவா கொடுத்தேன், நானும் சோறு போடப் போறேன்னு தர்மப் பிரபு மாதிரி எதுவும் செஞ்சிகிட்டிருக்காதீங்க. உங்க அம்மாவை பத்திரமா முதியோர் இல்லத்துக்கு அனுப்பிட்டீங்களா, அதை நினைச்சு திருப்தி பட்டுக்கோங்க. வீட்டுக்கு வாங்குன கடனுக்கு இன்னும் 36 மாசம் ட்யூ கட்டனும். அப்புறம் கார் வாங்க லோன் போடணும். அதனால இனிமே அந்தப் பாட்டியைப் பாக்காம வாக்கிங்க் போங்க இல்லாட்டி வீட்டுலயே நடங்க” என்று அதட்டி விட்டு குழந்தையை எழுப்பச் சென்று விட்டாள்.


மறுநாள் காலை வாக்கிங் போகக் கிளம்பியவனை தடுத்த புவனா, கையில் ஒரு ஐ-பாட்டைக் கொடுத்து, :இந்தாங்க இதைக் காதுல மாட்டிகிட்டு நேராப் பாத்து நடங்க. பாட்டு கேட்டுகிட்டே வாக்கிங்க் போனா சோர்வு தெரியாதாம். என்றாள். 
அவள் எதற்கு சொல்கிறாள் என்று புரிந்து கொண்டவனாய் நடையைக் கட்டினான். 
அதே சாலை, அதே இடம், அதே பாட்டி.. காதில் இளையராஜா கீதம் கேட்டுக் கொண்டிருந்தது. பார்க்காமல் கடந்து போவது இப்போது கொஞ்சம் சுலபமாகத் தெரிந்தது அவனுக்கு. 
மறுமனை வரைக்கும் கடந்து திரும்பும் போது, அந்த பாட்டி கையேந்திக் கொண்டிருந்தது தெரிந்தது அவனுக்கு. இருந்தும் நேராக பார்த்தபடி நடக்கலானான். பாட்டியைக் கடக்கும் போது பாட்டி ஏதோ தன்னை நோக்கி கை அசைப்பது போல இருந்தது. காதுக்குள் பாலசுப்பிரமணியம் மூச்சு விடாமல் பாடிக் கொண்டிருந்தார், திடீரென ஏதோ பலத்த இடி முதுகில் இடித்த மாதிரி இருந்தது. மயங்கிச் சரிந்தான். 
கண்விழித்த போது ஏதோ மருத்துவமனையில் தான் இருப்பது தெரிந்தது. கண்ணை லேசாகக் கசக்கிக் கொண்டு சுற்றிப் பார்த்தான். அருகில் யாரோ பரிச்சயமான முகம். அதே பாட்டி தான். 
“டாக்டரம்மா, புள்ள முழிச்சிடுச்சு” சந்தோசமாகக் கத்திய படி பாட்டி வேகமாக ஓடினாள். 
அந்தப் பெண் மருத்துவர், அருகில் வந்து நாடித் துடிப்பை பரிசோதித்தார். 
என்ன ஆச்சு என்பது போல குழப்பமாகப் பார்த்தான் பூபாலன். 
அவனைப் புரிந்து கொண்டவராய், மருத்துவர், “வாக்கிங்க் போகும் போது எதுக்கு சார் கண்டதைக் காதுல மாட்டிகிட்டு போறீங்க? அப்படியே மாட்டினாலும் கொஞ்சம் கவனமா முன்னப் பின்ன பாத்து நடக்க மாட்டீங்களா? மாடு முட்டிருக்கு. நல்ல வேளையா ஸ்பைனல் கார்ட் எதுவும் ஆகல. பலத்த அடியோட மயங்கிருக்கீங்க. உங்கள யாருன்னே தெரியாதுன்னு இந்த பாட்டிமா சொல்றாங்க. முதல்ல உங்க வீட்டு விவரங்களை சொல்லுங்க.”
“டாக்டர், என் பேரு பூபாலன், என் மனைவி புவனா. அவ நம்பர்…” வீட்டு விவரங்களை சொல்லிவிட்டு பாட்டியைக் குற்ற உணர்வோடு பார்த்தான். 
“மாடு ஒண்ணு அத்துகிட்டு ஓடியாந்துதுப்பா. நீ காதுல எதையோ மாட்டிகிட்டு நடந்து போயிட்டிருந்த, நான் கத்துனது உன் காதுல விழுகலை போல. கையக் கூட காண்பிச்சேன். அதுக்குள்ள மாடு உன்னை முட்டிடுச்சு, அப்புறம் அங்க நடந்துகிட்டிருந்தவக தான் உன்னைத் தூக்கி ஆம்புலன்சுல ஏத்தி அனுப்புனாங்க. உன் கையில வீட்டைப் பத்தி எந்த விவரமும் இல்லை. அடி பலமா இருந்ததால மயங்கிட்ட வேற. எனக்கு எம்புள்ளையப் பாக்குற மாதிரியே இருந்துச்சு, அதான் நானும் ஏறி வந்துட்டேன். வந்து உனக்கு மருந்தெல்லாம் போட்டு வுட்டு, கையில இருந்த கொஞ்சம் காசையும் கட்டிட்டேன். ஒம் பொண்டாட்டி வந்த உடனே மீதி காசையும் கட்டிருய்யா. நான் கிளம்புதேன்” என்று சொல்லிக் கொண்டிருந்த பாட்டியை அவனாள் பார்க்காமல் இருக்க முடியவில்லை. 
மருத்துவமனையில் இருந்து அழைப்பு வந்ததும் ஏற்கனவே பதறிப் போய் இருந்த புவனா அலறி அடித்துக் கொண்டு வந்திறங்கினாள்.  பணத்தை செலுத்திவிட்டு  தன்னை பார்த்துக் கொண்ட பாட்டியை தேடினான். அவள் முன்பே சென்று விட்டாள் எனத் தெரிந்தது. வெளியே வந்து ஆட்டோ பிடித்தான் பூபாலன். 
“ஆட்டோ மயிலாப்பூர் அன்பு இல்லத்துக்கு” போங்க என்றான்.”அங்க எதுக்குங்க, இந்தக் கதியில போயி உங்க அம்மாவைப் பாக்கணுமா. பாத்த உடனே பதறிப் போய் என்னைக் கூட்டிட்டுப் போன்னு ஒப்பாரி வெக்கப் போறாங்க. எல்லாம் சரி ஆனதுக்கப்புறம், சனிக்கிழமைக்கு மேல போயி பாத்துக்கலாம்” என்றவளை கோபமாக முறைத்தான் பூபாலன்.***


இன்று காலை, அவர்கள் வீட்டின் இரண்டாவது படுக்கை அறையில் இரண்டு பாட்டிகள் அவனது குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருந்தார்கள், கண்கள் பனித்தபடி. 

1+

Ready for the Leap?

Now rev-up your creative engines and wait for my E-mail! I will get in touch with you as soon as humanly possible!

WhatsApp me if you have any questions