கேள்வி

உங்களின் கனவு வேலை எது ?

என் பதில்

இப்போது நான் செய்து கொண்டிருப்பது என் கனவு வேலை தான். பொறியியல் டிப்ளமொ அப்பாவின் ஆசைக்காக படித்து விட்டு, பைப்பிங் துறையிலும், கண்ணாடி உற்பத்தித்துறையிலும் வடிவமைப்பு பொறியாளராக 5 ஆண்டுகள் வேலை செய்து விட்டு, அப்பாவின் மறைவுக்குப் பின் அந்த வேலையில் ஏற்பட்ட சலிப்பு மற்றும் புராஜெக்ட் பற்றாக்குறையை சாக்காக வைத்து வேலையை உதறிவிட்டு, கிராபிக் டிசைன் துறையில் ஃப்ரீலான்சராக கேரியரை மாற்றியமைத்துக்கொண்டேன். இது என் கனவு வேலை என்பதற்கான காரணங்கள் சில,

 1. என் வீட்டில் இருந்துதான் வேலை செய்கிறேன். தினமும் காலை 1 மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் வாகனப்புகையில் நீந்த அவசியமில்லை!
 2. வானம் பார்க்கத் தோன்றினால் வானம் பார்க்கிறேன், வேலை பார்க்கத் தோன்றினால் வேலை பார்க்கிறேன். உத்தரவிட யாரும் இல்லை, மேலேயும் கீழேயும்!
 3. கற்றுக்கொள்ள நினைத்ததெல்லாம் கற்றுக்கொள்கிறேன். கடந்த 4 ஆண்டுகளில் புல்லாங்குழல், பியானோ போன்றவற்றை கற்றுக்கொண்டேன், சுமாராகத்தான் ஆனால் ஆஸ்கார் வாங்கும் அவசரம் இல்லாததால் பொறுமையாக கற்றுக்கொள்கிறேன். பொறுமையாக இருக்கவும் கற்றுக்கொள்கிறேன்.
 4. பல தொழில்கள் பற்றிய அறிவு அகண்டமாகிக்கொண்டே இருக்கிறது, மைக்ரோமில்லிமீட்டர் அளவில் தான், but still!
 5. கனவுகளுக்கு பாலம் அமைக்கிறேன், பிராண்டிங்(Logo, website, marketing) வடிவமைப்பு மூலமாக என்னால் இயன்ற அளவு உள்ளூர் தொழில்கள் சில பலவற்றுக்கு அடையாளம் கொடுத்திருக்கிறேன். சொந்தத் தொழில் ஆசையில் இருப்பவர்களுக்கு ஆலோசனைகளையும் சேர்த்தே அளிக்கிறேன் எனக்கு தெரிந்த வரையில்.
 6. பணத்தை விட அதிகமாக நம்பிக்கையை சம்பாதித்திருக்கிறேன். Client enquiry ஆக ஆரம்பிக்கும் வாட்சாப் உரையாடல் ஒரு உறவாகவே மாறிவிடும். பல கிளையண்டுகள் புராஜெக்ட் முடிந்த பின்னரும் கூட என்னிடம் அறிவுரை கேட்டே முக்கியமான மார்க்கெட்டிங் முடிவுகளை எடுக்கிறார்கள். முதல் முறை ஒப்பந்தம் பேசும்போது தவிர்த்து பின் எப்போதும் எந்த கிளையண்டும் பேரம் பேசியது கிடையாது.
 7. நான் ரொம்ப பிசி என உண்மையாக சொல்லிக்கொள்ளும் நிலையில் இருக்கிறேன். நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் வரை உழைக்கிறேன். பணத்தை என் அக்கவுண்டில் செலுத்திவிட்டு நீங்க தான் செஞ்சு கொடுக்கனும், ரெண்டு வாரம் ஆனாலும் பரவாயில்ல என காத்திருந்து வேலை வாங்கும் அளவிற்கு புராஜெக்ட்கள் தொடர்ந்து இருக்கின்றன.
 8. விடுமுறை எனும் பேச்சுக்கே இடமில்லை, அவசியமும் இல்லை. மடிக்கணினியும் இணையமும் இல்லையென்றால் என் பிழைப்பு ஒரு புனைக்கதையே! எங்கே வசதியாக ஒரு இருக்கையும் மேசையும் கிடைக்கிறதோ அங்கே உக்காந்து வேலை செய்ய வேண்டியது! ஒவ்வொரு மணி நேரமும் 10 நிமிடம் விடுமுறை!
 9. எல்லா வெளிநாட்டுக் கரன்சிகளிலும் ஊதியம் வாங்குகிறேன், அதனால் உள்ளூர் தொழில் முனைவோருக்கு மிகக்குறைந்த விலையிலேயே லாபக் கணக்கு பார்க்காமல் தரமான வேலையை தரமுடிகிறது.
 10. உதவி செய்ய கணக்கு பார்ப்பதில்லை, மனசுக்கு தோன்றும் ஏதோ ஒரு நல்ல காரியத்திற்கு சட்டென்று செலவு செய்கிறேன். பொறியாளராக இருக்கும் போது இப்படி இருந்ததில்லை!
 11. கண் முன்னே ஒரு தொழில் விதையாகி, துளிராகி, செடியாகி, மரமாகி கனிகள் கொடுக்கும் பயண அனுபவம் வருடம் முழுதும் கிடைத்துக்கொண்டே இருக்கும். போன வருடம் சின்ன ஸ்டார்டப், அடுத்த வருடம் கிளை அலுவலகம் தொடஙகும், இப்படி!
 12. நல்லவனாக இருக்க முடிகிறது. பொருளாதாரம் நிறைவாக இருக்கும் போது யாரையும் ஏமாற்ற வேண்டும், பொய் சொல்ல வேண்டும் என்றெல்லாம் எண்ணங்கள் வர வாய்ப்பில்லை. எல்லாருக்கும் எல்லாம் செய்ய மனம் வருகிறது. நேரமின்மையால் சில தவிர்ப்புகள் சகஜம் என்றாலும் முடிந்த வரையிலும் மாதம் ஒரு உள்ளூர் சுயதொழில்வீரருடன் பணியாற்றுகிறேன்! உள்ளூர் பொருளாதாரம், தற்சார்பு மற்றும் இயற்கை வாழ்வியல் இவையெல்லாம் என் கனவுகள், அவை சார்ந்த தொழில்களுக்கே முன்னுரிமை அளிக்கிறேன்.

இவை சுயதம்பட்டம் அடிப்பதற்காக சொல்லவில்லை, யார் மனதையும் எவ்விதத்திலாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும். என் வாழ்க்கைப்பயணத்தின் மிக நல்லதொரு சன்னலோரக்காட்சியை மட்டும் இந்த பதிலாக கொடுத்திருக்கிறேன், inspire செய்யும் நோக்கோடு!

கேள்விக்கு நன்றிகளும் புத்தாண்டு வாழ்த்துகளும்!

0

இந்த இடுகையை கோராவில் காண்க

தமிழ் கோரா இணையதளத்தில் என்னுடன் இணைந்திடுங்கள்!

Ready for the Leap?

Now rev-up your creative engines and wait for my E-mail! I will get in touch with you as soon as humanly possible!

WhatsApp me if you have any questions