கேள்வி

காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும்?

என் பதில்

இப்போது நடப்பது ஊழிக்காலம். பூமிக்கு மனிதன் எனும் வைரசால் காய்ச்சல் வந்திருக்கிறது. அதன் மேனியெல்லாம் பற்றி எரிகிறது. அதன் பஞ்சபூத சமனிலை பாதிக்கப்பட்டிருக்கிறது. இதில் பூமியைக் காப்பாற்ற வேண்டியதில்லை. மனிதர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும், அதற்கு மரங்கள் நடுவது மட்டும் தீர்வில்லை. அம்புட்டுதான்.

மரங்களை நட்டு விட்டால் பருவமாற்றங்களை தடுத்து பூமியைக் காப்பாற்ற முடியும் என்று நினைத்தால் நம்மை விட முட்டாள் உயிரினம் இந்த பூமியிலே இல்லை.

நாம் சிதைத்து வைத்திருக்கும் அனைத்தும் பின் செல்ல முடியாத அளவுக்கு மோசமானவை. உலகில் அனைத்து உயிரினங்களும் தங்கள் கடமையை மட்டும் செய்து இயற்கையோடு இணைந்து வாழும் போது, நாம் மட்டும் பொருளாதாரம், தொழில்னுட்பம் என இயற்கையை பிரிந்து வெகு தூரம் வந்து விட்டோம். இதில் மரம் நடுவது என்பது வெறும் சால்ஜாப்பு மட்டுமே. இயற்கையின் வேகத்தில் நாம் மரம் நட முடியாது. ஆனால் அதை விட பன்மடங்கு அதிவேகத்தில் மரங்களை அழிக்க நம் வாழ்வியலை மாற்றி வைத்துக் கொண்டிருக்கிறோம்.

இதற்கு தீர்வே இல்லை என்பது போல எதிர்மறையான கருத்தாக இது தோன்றினாலும் இது தான் உண்மை. 4-5 தலைமுறைகளாக, நம் மரபையும் வேர்களையும் மறந்து விட்டு அசுரத்தனமாக அடித்து நொறுக்கிய பானை, அது பூமியல்ல, நம் எதிர்காலம். பூமி எனும் இந்தக் கோளம் 5 பேரழிவுகளை பார்த்து விட்டது, அது மீண்டும் தொடங்கும் ஒரு புது வாழ்வை. 6-வது பேரழிவின் மத்தியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது மட்டுமல்லாமல், அந்த பேரழிவின் வேகத்தை அதிகரித்த புண்ணியமும் (Catalyst) நமக்குத் தான் சேரும்.

மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள் மரங்களை வெட்டியது மட்டும் தான் நாம் செய்த பிழையா? இல்லை, மரங்களை வெட்டுவதும் பயன்படுத்துவதும் இறை நமக்களித்த கொடை. காடுகளை அழிப்பதும், உயிரினங்களை கொன்று குவித்ததும் நாம் வாழ்க்கைக்கு தேவையான அன்றாட பொருட்களை சாத்தியமாக்கிக் கொள்ள நாம் செய்து கொண்ட அட்ஜெஸ்மெண்ட்.

காலை பல் துலக்கும் பிளாஸ்டிக் புருசு, நுரைக்கும் பேஸ்டு, அது பேக் செய்த குப்பி தொடங்கி இரவு தூங்கும் போது போடும் ஏசி வரை ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு மனிதரும், ஒவ்வொரு நொடியும் 100 மரங்களை வெட்டிக்கொண்டிருக்கிறார். பாமாயில், சமையல் எண்ணெய், பெட்ரோல், டீசல், தங்க நகைகள், இவை எல்லாம் மழைக்காடுகளையும், மலைகளையும் அழித்து தான் உங்கள் இல்லத்திற்கு வருகிறது. எத்தனை பொருட்களை தியாகம் செய்ய நீங்கள் தயார்? அவை இல்லாமலும் வாழ முடியும், நீங்கள் முயற்சி செய்ததில்லை. மரம் நட்டு மனதை ஆற்றிக்கொள்கிறீர்கள்.

மரம் நடுவது என்பது ஒரு எழவு வீட்டில் சொல்லும் ஆறுதல் வார்த்தை போல. செத்துப் போன மனிதரை அது ஒரு காலும் உயிர்பெறச் செய்யாது. ஆனால் கொஞ்சம் நிலையை உணர்ந்து நம் வளர்ச்சி எனும் மாயக்குதிரையின் வேகத்தைமட்டுப் படுத்தினால், இயற்கையை ரொம்ப புனிதப்படுத்தாமல், இயல்பாக அதனோடு ஒத்திசைந்து வாழ ஆரம்பித்தால், அதே எழவு வீட்டில் மகிழ்ச்சியை கொண்டு வரலாம், ஆரோக்கியமான அடுத்த தலைமுறை தலையெடுக்க வழி செய்யலாம்.

கேள்விக்கு நன்றி.

0

இந்த இடுகையை கோராவில் காண்க

தமிழ் கோரா இணையதளத்தில் என்னுடன் இணைந்திடுங்கள்!

Ready for the Leap?

Now rev-up your creative engines and wait for my E-mail! I will get in touch with you as soon as humanly possible!

WhatsApp me if you have any questions