கேள்வி

கொரோனாவை வைத்து ஒரு ஹைக்கூ சொல்ல முடியுமா?

என் பதில்

சொல்லலாமே!


உன் கண்ணீரைத் துடைக்க

உன் கைகளுக்கே தடை

சோப் கொண்டு கழுவும் வரை!


கொன்றால் பாவம்

தின்றால் போச்சு… எங்க போச்சு?

ஏரோப்ளேன் ஏறி உலகம் சுற்ற…


இயற்கைக்கு எதிராய்

சதுரங்க ஆட்டம்…

கார்பன் ராஜாவுக்கு (நாமளும் நம்ம கண்டுபிடிப்புகளும் தான்)

கொரோனா ராணி செக்மேட்!


கைகள் கழுவினாலே

மன்னிக்கும் கொரோனா!

மனிதனுக்கும் இல்லாத கருணா!


செவ்வாய் கிரகத்தின் முதல் வீட்டில்

கிரகப்பிரவேசம்…

பூமியில் வெள்ளை அடித்து முடித்திருந்தது

கொரோனா!


காப்பாற்ற கடவுள் வரவில்லை

மருத்துவர் தான் வந்தார் என்றான் அவன்…

“இறையே, இன்று நான் சந்திக்கும் கடைசி கொரோனா

நோயாளியையும் காப்பாற்றி விடு”

தொழுது நிமிர்ந்தார் டாக்டர். ஹமீத்.


ஒட்டடை அடிக்கும் போது,

சுவர் இடுக்களில் ஓடி ஒளிந்தது சிலந்தி!

தனிமைப்படுத்திக் கொள்கிறதோ?


ஊரடங்கு உத்தரவு

ஆளில்லா சாலையில் ஒரு வியாபாரி

நெற்றியில் எழுதியிருந்தார்

“எனக்கு கொரோனா இல்லை

குடும்பம் இருக்கிறது, பசி இருக்கிறது”


வெளியே செல்லத் துடிக்கிறோம்

மீண்டும் புகையைக் கக்கி

காற்றை கரியாக்கி

சோற்றை எரிக்க ஓட்டம் ஓடி

ஆற்றை அழித்து காட்டை எரித்து

வீட்டை வெறும் தூங்கும் இடமாக

மட்டுமே பார்க்கும் வேட்டை

தினங்களை எதிர்நோக்கிக்

காத்திருக்கிறோம்!

நன்றி மீண்டும் வருக

என்றது கொரோனா


நடந்தோம், ஓடினோம்

ஓட்டினோம், பறந்தோம்

திரும்ப மனமின்றிச் சுற்றித்

திரிந்தோம்!

அடைத்து வைக்க எவனுண்டு

என இறுமாந்திருந்தோம்!

நானே அவன் என்றது கொரோனா


பறவைகளுக்கும் மீன்களுக்கும்

நாம் போட்டியாய் மட்டுமே இருந்திருக்க வேண்டும்

எதிரியாய் மாறினோம், பாய்ந்தது இயற்கையின் சட்டம்

கொரோனா!


கடவுளுக்கு கண்ணில்லையா என்றான்

“உன் கண்களுக்கு நான் கொரோனாவாகத்

தெரிகிறேன், என்ன செய்ய” என்றபடி

துண்டை உதறி நுரையீலுக்குள்

நுழைந்தார் கடவுள்!

கைகூப்பியது இயற்கை


கெஞ்சிக் கேட்டேன் அடங்கவில்லை

கொஞ்சிக் கேட்டேன் அடங்கவில்லை

மிஞ்சிக் கோலெடுத் தடித்துக் கேட்டேன்

அப்போதும் அடங்கவில்லை!

கனவிலும் நினைத்திருப்பாயா

கொரோனாவாய் வருவேனென்று?

-பூமி


உலகத்தையே இணைத்தோம்

இன்று வீட்டுக்குளேயே

சிதறிக் கிடக்கிறோம்!


நாளை சோப்புக்கும் அடங்காதவைரஸ் ஒன்று வந்தால் என்ன செய்வோம்? முதல் கண்டிப்புக்கு அடங்கி இருந்தால் இயற்கை மன்னிக்கலாம். கண்டிப்பு தண்டனையாக மாறும் வரை ஆடிக்கொண்டே இருந்தால் அம்புட்டுதேன்!

கேள்விக்கு நன்றிகள்! பத்திரமாக இருங்கள். கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுங்கள். மனிதர்களிடம் இருந்து ஆறடி தள்ளியே இருங்கள். மீண்டு வருவோம், வரும்போது நம்மை சுற்றியுள்ள பூமியை வெளியை, மரங்களை, புல்லினங்களை, விலங்குகளைப் பற்றிய ஒரு புரிதலோடு நிதானமாக வாழ முயற்சிப்போம்!

0

இந்த இடுகையை கோராவில் காண்க

தமிழ் கோரா இணையதளத்தில் என்னுடன் இணைந்திடுங்கள்!

Ready for the Leap?

Now rev-up your creative engines and wait for my E-mail! I will get in touch with you as soon as humanly possible!

WhatsApp me if you have any questions