கேள்வி

கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா?

என் பதில்

எதையாவது என்ன எதையாவது? எல்லாத்தையும் உணர்த்துகிறது. நம் தலைமுறை சந்திக்கும் மிக நூதனமான, மிக மோசமான கொள்ளை நோய் நிகழ்வு.

1 நாள், 1 வாரம், 21 நாட்கள்… இந்த வைரசின் தாக்கம் இன்னும் பல மாதங்களுக்கு நம்மை தனிமைப்படுத்திக்கொள்ள நிர்ப்பந்தப் படுத்தலாம் என சமீபத்தில் படித்தேன். சுனாமியோ, புயலோ, வெள்ளமோ, நிலனடுக்கமோ முடிந்துவிட்டது என தெரியும். உதவிக்கரம் நீட்ட அருகாமை ஊர் மக்களோ, மாவட்ட, நாட்டு மக்களோ இருப்பார்கள். கண்ணுக்கு தெரியாத இந்த வைரஸ் முடிந்து விட்டது என்று அறிவிக்க யாருக்கு சக்தி இருக்கிறது? பொருளாதாரம், தொழில்நுட்பம், என எல்லாவற்றிலும் ராஜா என மார்தட்டிக் கொண்டு, உலக நாடுகளுக்கு எல்லாம் பஞ்சாயத்து செய்து கொண்டிருந்த நாடுகள் இன்று மண்டியிட்டு வானம் பார்த்துக் கொண்டிருக்கின்றன.

நான் இந்த நிகழ்வில் இருந்து கற்றுக் கொண்டவை இதோ,

1. சித்த மருத்துவம் பொய், ஹோமியோபதியில் ஆராய்ச்சி இல்லை, அலோபதி தான் அப்டேட் ஆன சிஸ்டம் என்ற நம்பிக்கை அனைத்தையும் தவிடு பொடி ஆக்கி உள்ளது கொரோனா. தனி மனித ஒழுக்கம், சுகாதாரம், நோய் எதிர்ப்பாற்றல் இவை மட்டுமே சிறந்த மெடிகல் சிஸ்டம், உடல் மட்டுமே அவரவர்க்கு வாய்த்த சிறந்த டாக்டர். தடுப்பூசி கண்டுபிடிக்க மட்டுமே 1-3 ஆண்டுகள் ஆகலாம். இன்று முற்றிலும் பரவாமல் நின்றாலும் ஏதோ ஒரு பாரின் டூரிஸ்ட் உடலில் அறிகுறி ஒன்றும் இல்லாமல் மீண்டும் இதே போன்ற ஒரு சங்கிலித் தொடர் நிகழ்வை முடுக்கி விட இந்த வைரசுக்கு ஒரு விமான நிலையமோ, பார்ட்டி ஹாலோ, திரையரங்கமோ போதும். எனவே நம் நோயெதிர்ப்பாற்றலை ஸ்திரமாக வைப்போம். எப்படி? இயற்கை உணவுக்கு திரும்புதல், மேலை நாட்டு மோகத்தை குறைத்தல், மரபு சார் தொழில்களுக்கு நம் அடுத்த தலைமுறையை திருப்புதல் (நம்மால் இந்த ஆணியைப் புடுங்க முடியாது, போன தலைமுறை நம்மை அதற்கு தயார் படுத்தவில்லை என்பது முக்கிய படிப்பிணை) தற்சார்பு பொருளாதாரம் உருவாக்குதல் இவை எல்லாம் சில யோசனைகள்.

2. அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி நாடுகளில் சுய ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு இருக்கிறது என்பது எவ்வளவு பொய் என்பதை கொரோனா எடுத்துக் காட்டியுள்ளது. அரசும் சரியான நேரத்தில் எச்சரிக்கவில்லை, மக்களும் எச்சரித்த போது சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. கடற்கரை, பார்கள் பார்ட்டிகள் போன்றவை வழக்கம் போல இயங்கியதை பலர் டிவிட்டரில் பகிர்ந்திருந்தார்கள். மிக தாமதமாகவே தனிமைப்படுத்துதலின் அருமை புரிந்திருக்கிறது. நம்ம ஊர் மக்கள் கொஞ்சம் பரவாயில்லை என்று தோன்றுகிறது.

3. உலக சுகாதார மையத்தின் credibility நம்பகத்தன்மையை உணர்த்தியிருக்கிறது கோரோனா. அவர்களின் ஒரு பொறுப்பற்ற ட்வீட்

இதை நம்பித்தான் சீனாவுடனான போக்குவரத்தை பல நாடுகள் இயல்பாக நடத்திக் கொண்டிருந்தன என்று படித்தபோது வேதனையாக இருந்தது. அப்போதே இவர்களின் இணையத்தை பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.

4. வெளிநாடு, வெளியூர் என்றெல்லாம் சென்று வேலை பார்ப்பது கௌரவமாகவும், பிஸ்தாவாகவும் பார்க்கப்பட்ட காலம் மலையேறப் போகிறது. எனக்குத் தெரிந்து வெளிநாட்டில் பிள்ளைகளை செட்டில் செய்து விட்டு அவர்களிடம் இருந்து டாலர் மற்றும் பெற்றுக் கொண்டு இந்தியாவில் அல்லாடும் வயதான பெற்றோர்கள் சிலர் இப்போது மிரண்டு போயிருப்பதை தேற்ற முடியாத வேதனையோடு பார்க்கிறேன்.

5. நம் பொருளாதார வளர்ச்சி, தொழில்னுட்ப வளர்ச்சி இரண்டும் வாழ்வாதார வீழ்ச்சி எனும் அடித்தளத்தில் தான் இயங்குகின்றன. காற்று, நிலம், ஆகாயம், பூமி, நீர் என 4 முக்கிய மண்டலங்களையும் நாசமாக்கிவிட்டு நோய் வந்தால் உடனே குணமாக வேண்டும் என எதிர்பார்ப்பது எங்கனம்? அவரவர் ஊரில் அவரவர் தேவைகளுக்கு அவரவர் உழைத்து அவரவர் சமூகத்தோடு கூடி வாழ்தலே நிம்மதியான வாழ்க்கைக்கு உத்தரவாதம். இது கொரோனாவின் முக்கிய பாடம். அப்படி இருந்தால் கொள்ளை நோயெல்லாம் வராதா? என்றால், அதற்கு பதில் இது தான், ஒவ்வொருவர் உயிரும் பிரிய வேண்டும் என்று விதித்திருக்கும் நேரத்தில் பிரியத்தான் செய்யும். ஆனால் இவ்வளவு பதட்டம், பயம், உலகளாவிய பரவல் இதெல்லாம் நம் நவீன யுக்திகளாலேயே சாத்தியம். இந்த நோய் முழுக்க முழுக்க விமான நிலையங்களையே மையப்புள்ளியாய் கொண்டு பரவியதை நினைவில் கொள்க.

அம்மை போட்டால் நாம் என்ன செய்தோம்? வேப்பிலை அடித்தோம், மஞ்சள் தெளித்தோம், தனிமைப்படுத்தினோம், குணமானோம், நிம்மதியாக நடமாடினோம். ஆனால் இவ்வளவு பதட்டம், பயம் எல்லாம் இல்லையே? இதை எல்லாம் தாண்டி கொள்ளை நோய் ஒன்று இந்த உலகை அழிக்க நேர்ந்தால் ஒன்றும் செய்வதற்கில்லை. பல ஆயிரம் கோடி ஆராய்ச்சி செய்து, செய்திகள் பரப்பி, ஊசிகள் போட்டு, உள்ளுறுப்புகளை படம் எடுத்து எல்லாம் செய்து விட்டு மருந்து இல்லை என ஒப்புக் கொள்வதை விட அது எவ்வளவோ பரவாயில்லை. 20 of the worst epidemics and pandemics in history
இந்த லிஸ்டில் ஒன்று கூட நம் நாட்டில் இல்லை என்பது ஆறுதல். மேலை நாட்டு சுகாதாரம், உணவு முறை, இயற்கைக்கு முரணான செயற்கை வாழ்வியல், கலவியியல் தவறுகள், இவையே கொள்ளை நோய்களுக்கு காரணமாக விளங்குகின்றன. நாம் நம் நாட்டு வாழ்க்கை முறையைக் கிண்டல் அடித்துக் கொண்டும் மட்டம் தட்டிக் கொண்டும் இருக்கிறோம்.

6. நம் கையில் ஒன்றும் இல்லை என்பதை விட தீதும் நன்றும் பிறன் தர வாரா என்பதே கொரோனாவின் முக்கிய படிப்பினை. நம்மை பார்த்துக் கொள்வது நம் கையில் தான் இருக்கிறது.

7. இயற்கை தன்னை சீர்படுத்திக் கொள்வதை உலகெங்கிலும் கண்கூடாக காண முடிகிறது. எத்தனையோ முறை இயற்கை ஆர்வலர்கள், விலங்கு நல ஆர்வலர்கள், சமூக போராளிகள் என பலர் சாலை ஓரங்களிலும் மக்கள் கூடும் இடங்களிலும் கையில் பதாகைகள் பிடித்துக் கொண்டு “கொஞ்சம் நில்லுங்கள், நிறுத்துங்கள், இயற்கையை அழிக்காதீர்கள்” என்று கதறிக் கொண்டு நிற்கையில் நாட்டுல ஆயிரம் வேலை இருக்கு, எனக்கே ஏகப்பட்ட தலைவலி இதுல இது வேறயா என கடந்திருப்போம். கேட்டிருப்போமா அவர்கள் குமுறல்களை? சலித்துக் கொண்டு நாம்எங்கே சென்றோம்? கொண்டாட, உண்டு பெருக்க, களித்திருக்க. சொல்லி சொல்லி பார்த்த இயற்கை இனி அடிச்சு பாக்க நினைக்குது போல.

8. மருத்துவர்கள் மற்றும் முதல் நிலை பணியாளர்கள், செவிலியர்கள் அனைவரும் கடும் மன உளைச்சலில் இந்த பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காகவாவது, இனி நாம் நம் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வோம். நம் அடுத்த தலைமுறையை இயற்கையோடு இணைந்து வாழும் தலைமுறையாக மீட்டெடுப்போம். இறந்த உயிர்களுக்கு நாம் செலுத்தும் சிறந்த அஞ்சலி அது தான். (ஒரு வேளை, அவர்கள் மீண்டும் நம் பரம்பரையிலேயே கூட பிறக்க நேர்ந்தால், ஒரு நல்ல பூமி வேண்டுமல்லவா?)

9. எல்லாவற்றிற்கும் மேலாக நமக்கு தேவை என்ன, அத்தியாவசியம் என்ன ஆடம்பரம் என்ன என உணர்த்தும் கொறோனா. அடுத்த சில மாதங்களுக்கோ வருடங்களுக்கோ நமக்கு தேவை நல்ல உணவு, குடிநீர், காற்று. கேளிககைகளோ, நொறுக்குத் தீனிகளோ, சினிமாவோ, ரியாலிட்டி நிகழ்ச்சிக் குப்பைகளோ அல்ல. பூமியோடு சேர்ந்து மனித மனங்களும் சுத்தமாக்கப்பட வேண்டிய நேரம் இனி. விவசாயிகளின் அருமை இனிமேல்தான் புரியப்போகிறது. டிவியை அணைத்துவிட்டு குடும்பத்தோடு இணைந்திருப்போம்.

இந்த கொள்ளை நோயால் கொடுக்கப்படும் முரட்டுப் பாடங்களைக் கூட இந்த மனித இனம் வெகு எளிதாக மறக்கக்கூடும். ஊடகங்களின் வேலை அது தானே? கேள்விக்கு நன்றி.

0

இந்த இடுகையை கோராவில் காண்க

தமிழ் கோரா இணையதளத்தில் என்னுடன் இணைந்திடுங்கள்!

Ready for the Leap?

Now rev-up your creative engines and wait for my E-mail! I will get in touch with you as soon as humanly possible!

WhatsApp me if you have any questions