கேள்வி

பொறுமைக்கும் நிதானத்திற்கும் உள்ள வித்யாசம் என்ன?

என் பதில்

ஒரு குட்டிக் கதை மூலம் இதற்கு பதில் அளிக்கிறேன்.

ஒரு அரசன் வேட்டைக்காகத் தன் படை சூழ காட்டுக்குச் சென்றான். தூரத்தில் ஒரு மானைக் கண்டு துரத்தி வரும் வேளையில், தன் படையிடம் இருந்து பாதை மாறி காட்டில் சிக்கிக் கொண்டான். மானும் சிக்காமல், வந்த வழி நினைவில்லாமல் தவித்த அரசன், தூரத்தில் ஒரு குடில் இருப்பதைக் கண்டு அவ்வழி நடக்கலானான். குடிலை நெருங்கியதும் தெரிந்தது, குடில் ஒரு முனிவரின் ஆசிரமம் என. குடிலில் இருந்து வெளிவந்த முனிவர், அரசனைக் கண்டு உள்ளே வரவேற்றார். தன் நிலையை விளக்கிய அரசன், தமது ஊருக்கு எவ்விதம் திரும்புவது என முனிவரிடம் கேட்டான். முனிவர் தம் சீடன் ஒருவனை மன்னனைத் தேடும் படைகளை இங்கே அழைத்து வரும்படி அனுப்பினார். அரசன் அப்போது தான் குடிலின் பின்னால் உள்ள தோட்டத்தை கவனித்தான்.

முனிவரிடம் அனுமதி பெற்று, தோட்டத்திற்கு சென்றான் அரசன். முனிவரும் பின் தொடர்ந்தார். பலவகைப் பூச்செடிகளும், கனி தரும் மரங்களும் நிறைந்திருந்த தோட்டத்தில் பூக்களில் தேனுண்ண வந்த வண்டுகளின் ரீங்காரமும், கனி உண்ண வந்த பறவைகளின் கொஞ்சல் கானங்களும் கேட்டு மனமகிழ்ந்த மன்னன், அடர்ந்த காட்டின் வனப்பை ஒரு தோட்டத்தில் உருவாக்கிய முனிவரின் கலைத்திறனை வியந்தான். மெய் மறந்தான். முனிவரிடம் இந்தத் தோட்டக்கலையைப் பயின்று, தன் அரண்மனையில் இதே போன்றதொரு தோட்டம் அமைக்க எண்ணினான். முனிவரும் அதற்குச் சம்மதித்து பலவகைத் தாவரங்களைப் பற்றி விளக்கிக் கூறி ஒவ்வொரு செடியில் விதைகள், பதியன் தண்டு, வேர் முதலியவற்றை அரசனிடம் தந்தார்.

சீடன் படையுடன் திரும்பி வர, அரசன் முனிவரிடம் விடைபெற்று அரண்மனைக்கு சென்றான். தான் கொணர்ந்த அனைத்து செடிகளையும் முனிவர் கூறியது போல் நட்டு ஒரு தோட்டத்தை உருவாக்கினான். தோட்டத்தைப் பார்வையிட முனிவருக்கு அழைப்பு விடுத்தான். முனிவரும் சம்மதித்து ஓலை அனுப்பினார். முனிவர் வரும் நாளுக்கு முதல் நாள், அரசன் தோட்டத்திற்குச் சென்றான். பூத்துக் குலுங்கிய மலர்களின் வாசம், கனிகளின் சுகந்தம் காற்றில் கரைந்து – கலந்து சுகானுபவம் தந்த வேளையில், கீழே தரையில் கிடந்த இலைச்சருகுகளைக் கண்டான். முனிவர் வந்து காணும் வேளையில் தோட்டம் இவ்விதம் அலங்கோலமாய் இருப்பதா என எண்ணி, பணியாட்கள் கொண்டு தோட்டத்தை சுத்தமாய் சுத்தம் செய்தான்.

அடுத்த நாள். முனிவர் தோட்டத்தைக் காண வந்திருந்தார். தோட்டத்தில் நுழைந்த முனிவரின் முகத்தில் இருந்த பிரகாசம் உடைந்து சோகமானது. முனிவரின் முகக்குறி மாற்றம் கண்டு ஏமாற்றம் அடைந்த மன்னன் “ஏதேனும் குறையா… முனிவரே?” என்றான்.

முனிவர் அரசனிடம் வினவினார்

“தேனீக்களின் இசை உண்டு.

பறவைகளின் கானமும் உண்டு.

சருகுகளின் நடனம் எங்கே..?”

இந்தக் கதைக்கும் நீங்க கேட்ட கேள்விக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை!

ஆனாலும் இவ்வளவு நேரம் படித்தீர்களே, அது தான் பொறுமை.

கட்டையை எடுத்துகிட்டு என்னை அடிக்கக் கிளம்பாம புன்னகையோட இருக்கீங்களே, அது தான் நிதானம்!

உங்க பொன்னான நேரத்தை வீணாக்கியிருந்தா மன்னிக்கவும்!

நன்றிங்கோ!

0

இந்த இடுகையை கோராவில் காண்க

தமிழ் கோரா இணையதளத்தில் என்னுடன் இணைந்திடுங்கள்!

Ready for the Leap?

Now rev-up your creative engines and wait for my E-mail! I will get in touch with you as soon as humanly possible!

WhatsApp me if you have any questions